News from Dinamalar http://www.dinamalar.com/district_detail.asp?id=375906
சிவகாசி : சிவகாசியில் ஒரே நாளில், 12 பேரை வெறிநாய் கடித்து குதறியது. இதில் ஒரு வயது குழந்தைகளும் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிவகாசி முஸ்லீம் நடுத்தெருவை சேர்ந்தவர் முகமதுயாசின், 55. இவர் நேற்று அதிகாலை தொழுகை முடித்து, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, கருப்பு நிற வெறிநாய் ஒன்று, இவரது இடது கை விரலை கடித்து குதறியது. பின்னர், தெரு வழியாக ஓடிய நாய், வழியில் தென்பட்ட சிறியவர், பெரியவர் என பலரையும் கடித்தது . முஸ்லீம் நடுத்தெருவை சேர்ந்த பாலசுப்பிமணியன், ஒன்றரை வயது குழந்தை சிவா, ராஜபாண்டி, 6, ஜபார் சாதிக், 3, ஸ்வீட்டி மலர், 7, மாரியப்பன், 68, ஆகியோரையும் கடித்தது. அதே பகுதியை சேர்ந்த சமுத்திரம், 55, அழகர்சாமி, 52, எதிர்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரன்,32, விஸ்வநத்தம் கண்ணன், 27, அய்யம்பட்டி ஹரிகேசவன்,1, கங்காகுளம் பழனிச்சாமி மகன் மணிகண்டன், 2, ஆகியோரும் நாய்கடியால் பாதிக்கப்பட்டனர். நாய்கடியால் பாதிக்கப்பட்ட முகமது யாசின், ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தடுப்பூசி போட்ட டாக்டர்கள், "சேதமடைந்த விரலை "பிளாஸ்டிக் சர்ஜரி' செய்ய,' கூறினர். இதை தொடர்ந்து, அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளர். இதேபோல், தலையில் கடிபட்ட 2 வயது சிறுவன் சிவா, மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டு வருகின்றனர். சிவகாசி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கதிரேசன், ""ஒரே நாய் பலரை கடித்துள்ளதால், நாய்க்கு "ராபிஸ்' பாதிப்பு இருக்கலாம் . நாயை பிடிக்க, நகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளோம். நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஐந்து ஊசி போட்டு கொள்ள வேண்டும்,'' என்றார். நகராட்சி சுகாதார அலுவலர் குமார் ,"" பலரை கடித்த வெறி நாயை பிடிக்க, ஆட்களை அனுப்பி உள்ளோம். நாய் சிக்க வில்லை. விரைவில் பிடித்து, புளுகிராஸ் அமைப்பின் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
News from Dinamalar http://www.dinamalar.com/district_detail.asp?id=375906 , D
No comments:
Post a Comment